Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, June 17, 2014


Tuesday  17 Jun 2014
பழமை வாய்ந்த பண்பாட்டையும் செழிப்பான கலாசாரத்தையும் கல்வியறிவு பெற்றவர்களை அதிகமாகவும் கொண்ட சமூகங்கள் வாழும் நாடென்ற பெருமையை ஒருபுறம் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறத்தில் சகிப்புணர்வு சிறிதும் அற்ற வகையில் மதரீதியான வன்முறைகள் அருவருக்கத்தக்க வகையில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
யுத்தம் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகளில் வட, கிழக்கில் பெரும்பான்மையினரான தமிழ் மக்களில் பலர் சொந்த இடங்களில், பூர்வீகக்காணிகளில் மீளக்குடியேற முடியாதவாறும் இயல்பு வாழ்வை சீராக முன்னெடுக்க முடியாதவாறும் துன்பப்படுகையில், மற்றொரு தமிழ் பேசும் மதச்சிறுபான்மையினரான முஸ்லிம் மக்களின் மத வழிபாட்டிடங்கள், வர்த்தக நிலைகள்மீது ஆங்காங்கு தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது.

பிந்திய சம்பவமாக களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம பகுதியில் இரு சமூகங்களுக்கிடையில் முறுகலைத் தொடர்ந்து தாக்குதல்கள், வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டதால் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன் படையினரும் குவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரமும் இப்பகுதியில் இரு சமூகங்களுக்கிடையிலான முறுகல் ஏற்பட்டிருந்தது.

அப்பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள்
தீக்கிரையாக்கப்பட்டிருப்பதாகவும் வீடுகள்மீது தாக்குதல் இடம்பெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருப்பதுடன் முஸ்லிம்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் சிறுபான்மையினருக்கு போதிய பாதுகாப்பு வழங்காதமை துரதிர்ஷ்டவசமானது என்றும் இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் பேச்சாளர் ஹில்மி அஹமட்  ஊடகமொனறுக்குத் தெரிவித்திருப்பதையும் அவதானிக்கமுடிகிறது. தனிப்பட்ட இருவருக்கிடையிலான சிறிய தகராறே மதரீதியான சச்சரவுக்கு வழிவகுத்திருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தை எவரும் தமது கரங்களில் எடுத்துக் கொள்ள இடமளிக்கப்படாது எனவும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது பொலிவியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ருவிற்றரில் தெரிவித்திருக்கிறார்.

இன, மத சிறுபான்மையினர்மீது வெறுப்புணர்வுகளைக் கக்கும் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் அதற்கு சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அண்மைக்காலமாக வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

நாட்டிலுள்ள மதச் சிறுபான்மையினர் அரசியலிலும் பொருளாதாரத்திலும் தேவையற்ற விதத்தில் அளவுக்கதிகமான செல்வாக்கைச் செலுத்திவருவதாக  பொதுபல சேனா உட்பட பௌத்த தேசிய வாதக் குழுக்கள் குற்றம் சாட்டுவதையும் அவதானிக்க முடிகிறது.
மதரீதியான வன்முறைகளைத் தூண்ட வேண்டாமென ஜனாதிபதியும் அரசாங்கமும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றபோதிலும் சிறுபான்மை மதக்குழுக்களுக்கு எதிரான காழ்ப்புணர்வும்  வன்செயல்களும் ஆங்காங்கு இடம்பெற்று வருகின்றன.

இலங்கையின் அரசியலமைப்பானது மதச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்திருகின்றபோதிலும் ஏனைய மதங்களிலும் பார்க்க பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பு ரீதியான எற்பாடு உள்ளது. இந்நிலையில் சிறுபான்மை மதக்குழுக்கள் தமது சமயரீதியான செயற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென ஒருசில பௌத்த தேசியவாதக் குழுக்கள் விரும்புவதாகத் தென்படுகிறது.

உண்மையில் பல்மத, பல்லின, பல்கலாசார மக்கள் வாழும் நாட்டில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ இருந்தாலும் அந்தந்த சமூகத்தவர்களின் மத,பண்பாட்டு, கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளித்து சமத்துவமாக நடத்தும் சகிப்புணர்வும் பொறுமையும் சகல தரப்பினர் மத்தியிலும் ஏற்பட வேண்டும்.

தற்போதைய தருணத்தில் இதற்குரிய பாரிய பொறுப்பும் கடப்பாடும் சர்வமதத் தலைவர்களிடமே உள்ளதாக தோன்றுகிறது. அதே சமயம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் முகவரமைப்புகள் எந்த விதமான பாரபட்சமுமின்றி வன்முறைகள் பரவாமல் கட்டுப்படுத்துவதையும் அமைதியை நிலைநாட்டுவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும்.

நீண்டகால யுத்தம் முடிவுக்கு வந்து 5 வருடங்கள் கடந்த நிலையிலும் அதனால் ஏற்பட்ட ரணங்களை ஆற்றுப்படுத்துவதற்கு பல்வேறு தடங்கல்களை நாடு எதிர்நோக்கியுள்ள நிலையில் மதரீதியான வன்முறைகள் அதிகரிப்பதற்கு சிறிதளவேனும் இடமளிக்கக் கூடாது.