Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, April 22, 2014


-எஸ்.றொசேரியன் லெம்பேட்-திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014 

புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்குரிய காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதாகவும் அக்காணியில் இராணுவத்தினருக்கான நலன்புரி வாணிபத்தை அமைத்து இராணுவ பராமரிப்புக்கும் பாதுகாப்பு பணிகளுக்கும் செலவிடுவதற்காக பெருந்தொகை பணம் சம்பாதித்து வருவதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

பொதுமக்களின் வியாபார நடவடிக்கைளுக்குரிய பொதுச்சந்தை காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தி அதில் தமது கடைகளை அமைத்து இலாபமீட்டி வருகின்றனர். இதனால் எமது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

யுத்தத்தின் கோரத்தால் நொந்துபோயுள்ள எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேறி இப்போது தான் மெல்ல மெல்ல விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொருளாதார ரீதியாக மேலெழுந்து வருவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். 

மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக எமது மக்களை நோகடிக்கும், வஞ்சிக்கும் எண்ணத்தில் நல்லிணக்கத்துக்கு ஏற்புடையற்ற செயல்களில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். 

எமது மக்கள் தமது விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சந்தை வாய்ப்புகள் இல்லாமல் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும் அனர்த்த சூழலில், பொதுமக்களின் செயல்பாடுகளுக்கு மேலும் மேலும் ஊறு செய்விக்கும் இராணுவத்தினரின் இத்தகைய செயலை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

குறித்த பொதுச்சந்தை காணியை மீட்டு பொதுமக்களின் சந்தைப் பயன்பாட்டுக்கு கையளிப்பது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலரும், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்ற போதிலும் இருவரும் கையை விரித்து விட்டதாக மக்கள் குறைபட்டுக்கொள்கின்றனர். 

இராணுவத்தினரால் தமது வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களால் முறைப்பாடுகள் பலமுறை இவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த காணியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி பொதுமக்களின் பாவனைக்கு, சந்தை வியாபார நடவடிக்கைகளுக்கு காணியை வழங்குவது தொடர்பில் மாவட்ட அரச அதிபரும், உதவி அரசாங்க அதிபரும் ஈடுபாடும் ஆர்வமும் காட்ட வேண்டுமெனவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளரும், பிரதேச வாழ் மக்களும் கோருகின்றனர். 

எனவே குறித்த காணியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி பொதுமக்களின் பாவனைக்கு கையளித்து, எமது மக்களின் சுயபொருளாதார மேம்பாட்டுக்கு உதவ, முல்லைத்தீவு மாவட்ட காணி உரிமை மீட்புக்குழுவின் ஊடாக எம்மால் முடிந்தவரையான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.