Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, April 21, 2014

ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வே நாட்டுக்கு நலமுடையது - ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் விக்கி:-

GTMNஉலக தமிழ்ச் செய்திகள்
21 ஏப்ரல் 2014
"வன்முறை களைந்து பிரிவுபடாத இலங்கையினுள் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை முன்வைத்தோம்."
ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வே நாட்டுக்கு நலமுடையது - ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் விக்கி:-
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2014
யாழ்ப்பாண மாவட்டம்
21.04.2014 அன்று காலை 9.30 மணிக்கு
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்
கேட்போர் கூடத்தில்
இணைத் தலைவரின்
தலைமையுரை
குருர் ப்ரம்மா………….!

இணைத் தலைவரவர்களே, அமைச்சர்களே, அரசாங்க அதிபர் அவர்களே, பிரதேசச் செயலாளர்களே, மற்றைய சக அலுவலர்களே!

இணைத்தலைவராக நான் பங்குபற்றும் முதற் கூட்டமிது. இங்கு வந்திருக்கும் அனைவரையும் உளமாற வரவேற்று எனது நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்கள் யாவர் மனதிலும் ஒரு கேள்வி எழக்கூடும். அதாவது சுமார் ஆறு மாதங்கள் பதவியில் இருந்த பின்னர் நான் ஏன் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுகின்றேன் என்ற கேள்வி. என்னைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த என் மக்களுக்கும், உங்களுக்கும் இப் பங்குபற்றலுக்கான காரணத்தை எடுத்துரைப்பது எனது கடமை என்று எண்ணுகின்றேன்.

1.    இந்திய அரசாங்கத்தின் நெருக்குதலினாலும், சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலினாலும் வடமாகாணத் தேர்தல் சென்ற வருடம் செப்ரெம்பர் மாதத்தில் நடைபெற்றது. அதில் எமது தமிழ்த் தேசியக் கூட்டணியும் பங்குபற்றியது. அந்தத் தேர்தலில் அரசாங்க உபகரணங்கள், சலுகைகள் போன்ற யாவற்றையும் பாவித்து, மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பெரும்பாலானோரைக் கொண்டு வந்து எமது ஆளுநரின் நேரடியான உதவிகளையும், அனுசரணைகளையும் பெற்றுக் கொண்டு, சட்டத்திற்கு முரணான வகையில் தேர்தல் கட்டுப்பாடுகளை மீறி மஹிந்த சிந்தனையை முன்வைத்தும், வடமாகாணத்தில் இன்றைய அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டுமாணப் பணிகளை முன்வைத்தும் அரசாங்கம் தேர்தலில் பங்கேற்றது. துரதிஷ்டவசமாக எமது ஆளுனர் அரசாங்கக் கட்சியின் தேர்தல் மேடைகளில் பிரசன்னமாகி அக் கட்சி வேட்பாளர்களுக்காக வாக்குக் கேட்டார்.

2.    எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போருக்குப் பின்னரான மக்களின் தேவைகளையும், முன்னுரிமைகளையும் அடையாளங் காட்டி நாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் போரின் பின்னரான குறுகிய கால, நீண்ட காலத் தேவைகளை இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டுப் பூர்த்தி செய்வோம் என்று கூறித் தேர்தலில் பங்குபற்றினோம். எமது அரசியல் ரீதியிலான தீர்வையும் முன்வைத்தோம். அதாவது வன்முறை களைந்து பிரிவுபடாத இலங்கையினுள் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை முன்வைத்தோம். ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வே நாட்டுக்கு நலமுடைத்து என்பதே எமது கோஷமாக இருந்தது.

3.    தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்;ட 38 பிரதிநிதிகளினுள் எம்மவர்கள் 30 பேர் மிகப் பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே மஹிந்த சிந்தனை உள்ளடங்கிய அரசாங்கக் கொள்கைகளை மக்கள் நிராகரித்து, போரின் பின்னர் எமது மாகாணத்தைக் கட்டியெழுப்பவும், புனர் நிர்மாணத்தில் ஈடுபடவும், நாட்டில் சமரசத்தை ஏற்படுத்தவும் நாம் முன்வைத்த எமது கொள்கைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.

4.    நாம் தேர்தலில் வென்ற சில வாரங்களினுள் எமக்கொன்று புலப்பட்டது. இன்றைய தேசீயக் கொள்கைகளும், அரசாங்கக் கட்டுப்பாடுகளும் வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும், வாழ்க்கை முறைகளையுங் கருத்தில் எடுத்துச் செயற்படுவதாக அமையவில்லை என்பதே அது. அரசாங்கத்தின் கொள்கைகள் ஆளும் கட்சியின் நலன்களையும் அதன் சில முக்கிய பிரமுகர்களின் நலன்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சில அலுவலர்களின்; நலன்களையும் முன்வைத்தே அமைந்திருப்பதையும்; நாம் உணர்ந்தோம். மத்திய அரசாங்க ஆளும் கட்சி தருவதை மாகாண மக்கள் ஏற்றே தீர வேண்டும் என்ற பாணியில்த்தான் நடவடிக்கைகள் சென்று கொண்டிருப்பதை அவதானித்தோம்.

5.    எம்மைப் பொறுத்தவரையில் இந்நிலையை எவ்வாறு கணிக்கின்றோம், நோக்குகின்றோம் என்பதை அண்மையில் ‘துரித மாகாண அபிவிருத்தி – முன்னேற்றத்தின் மார்க்கம்’ என்ற பொருளில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் கூட்டப்பட்ட தேசிய கருத்தரங்கத்தின்  முன்னிலையில் நான் பேசிய போது எடுத்தியம்பியிருக்கின்றேன். அதில் அரசாங்கத்தின் நலன்களுக்கு முரணற்ற முறையில், ஆனால் மக்களுக்குப் பயனுள்ள விதத்தில் எவ்வாறு முன் செல்ல முடியும் என்று குறிப்படும் போது பின்வருமாறு கூறியிருந்தேன்
- ‘…. அபிவிருத்தியின் போது அனைவரையும் உள்ளடக்கக் கூடிய அர்ப்பணிப்பு நிறைந்த ஓர் அணுகுமுறை, பொது மக்களின் விசேட தேவைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளிடையே ஒரு சம நிலையைப் பேணிப் பாதுகாக்க வேண்டியமை போன்றவை இன்றியமையாததாவன.’ என்று ஆங்கிலத்தில் அமைந்த அப்பேச்சின் ஆங்கில, தமிழ், சிங்கள மொழிப் பிரதிகள் ஒரே கைநூலாக வெளியிடப்பட்டுள்ளன. அக் கைநூலின் பிரதியொன்றை இங்கு சமர்ப்பிக்கின்றேன். மக்களின் அமோக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வடமாகாண சபையின் முதல் முதலமைச்சர் என்ற முறையில் அவரால் வழங்கப்பட்ட அப் பேச்சு எமது வடமாகாண சபையின் கொள்கைக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதால் அதனை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புக்களுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

6.    இங்கொரு முக்கியமான விடயத்தை உங்களுக்குக் கூறி வைக்க வேண்டும். 2013ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 18ந் திகதி திகதியிடப்பட்ட அதாவது ஜனாதிபதி அவர்களின் பிறந்தநாளையத் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று அவரிடமிருந்து கிடைக்கப்பெற்றேன். அதன் பிரதி ஒன்றை இங்கு சமர்ப்பிக்கின்றேன். அதில் அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு நான் இணைத் தலைவராகத் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் இம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது வருங்காலம் சம்பந்தமான மஹிந்த சிந்தனையை நிலை பெறச் செய்யத் தயாரிக்கப்பட்ட 2013 தொடக்கம் 2016 வரையிலான மாவட்ட தர மத்திம கால முதலீட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்து, நடைமுறைப்படுத்தி, ஆற்றுப்படுத்திக் கண்காணிப்பதற்காக அரசாங்கத்தினாலும், அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் உருவாக்கப்பட்டதை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

7.    இது இவ்வாறிருந்துங் கூட நாங்கள் 2013ம் ஆண்டு ஒக்ரோபர் மாதந் தொடக்கம் 2014 ஜனவரி வரையில் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைக்கலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டோம். இவ்வருடம் ஜனவரி 2ந் திகதி மாண்புமிகு ஜனாதிபதியையுஞ் சென்று சந்தித்தேன்.

8.    அத்தருணத்தில் 13வது திருத்தச் சட்டத்தின் வலுவின்மையைச் சுட்டிக்காட்டி அதன் கீழான கட்டமைப்புக்கள் போதியவாறான அதிகாரங்களைத் தராத பட்சத்திலுங் கூட போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்கருதி நாங்கள் ஒத்துழைக்க முன்வந்துள்ளோம் என்ற கருத்தைத் தெரிவித்தேன்.

9.    அந்த நேரத்தில், தேர்தலில் எம் மக்கள் ஆதரவைப் பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் தற்போது செயற்பட்டு வருவதால் ஜனாதிபதி செயலணியின் பணிகள் அனைத்தையும் எமக்குக் கையளிக்குமாறு கோரினேன். தொடர்ந்து அவற்றை எம்மால் பரிபாலித்து வரமுடியும் என்றுங் கூறினேன்.

10.    ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது பற்றிய எமக்குச் சார்பான ஒரு முடிவை ஜனாதிபதி அவர்கள் இதுகாறும் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மதியாமல் தொடர்ந்து மத்திய அரசாங்கக் கட்டமைப்புக்களே வடமாகாண நிர்வாகப் பரிபாலனத்தைக் கொண்டு நடத்தி வருகின்றன. இங்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இருவற்றிற்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால்த் தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்குந்  தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது. அந்த அதிகாரங்கள் ஊடாக அவ்வந்த விடயங்கள் சம்பந்தமாக கொள்கைகள் வகுப்பதும் அவற்றை நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதும் மாகாண சபைகளையே சாரும் என்பதை இத் தருணத்தில் கூறி வைக்கின்றேன். அவ்வாறு நடக்கத் தலைப்பட்டால் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்களின் தோளில் ஏறிச் சவாரி செய்பவர்களாய் ஆகி விடுவர். இது ஜனநாயகத்தைப் பாதிக்கும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

11.    ஜனவரி 2ந் திகதிய சந்திப்பின் போது எல்லா மாகாண சபைகளையும் ஒரே மாதிரியாகவே தாங்கள் நடத்திச் செல்வதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நான் கூறினேன்- வடமாகாணம் மற்றைய மாகாணசபைகள் போலல்லாது போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளதால் அதன் பிரச்சனைகளும், தேவைகளும் விசேடமானதும், தனித்துவமானதும் என்று. அத்துடன் அவற்றிற்கான தீர்வுகள் பிற மாகாணப் பிரச்சினைகளைத் தீர்ப்பது போலல்லாது வேறு விதமாக அமைந்திருப்பன என்பதையுஞ் சுட்டிக் காட்டினேன். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சப்பாத்து சைஸ் பொருந்தும் என்று நினைப்பது தவறு என்றுங் கூறி வைத்தேன்.

12.    மேலும் ஒரு விடயம் இங்கு கூறப்பட வேண்டும். 1987ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 13வது திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்திய இலங்கை - இந்திய இணக்கப்பாட்டு ஆவணம் கையெழுத்திடப்பட்ட போது சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது (யளலஅஅநவசiஉயட pழறநச ளாயசiபெ) வடகிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே முன்வைக்கப்பட்டது. மற்றைய மாகாணங்களின் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டல்ல. ஆனால் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் உருவாகக் கூடுமென நினைத்து முழு நாட்டுக்கும் 13வது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தப்; போவதாக இந்தியாவிற்கு அறிவித்தார். இதன் காரணத்தால் வடக்குக் கிழக்கிற்குக் கிடைக்க வேண்டிய சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமலே போயுள்ளது.

13.    தற்போது 13வது திருத்தச் சட்டத்தை இல்லாதாக்கி மத்திய அரசாங்கத்தின் கீழ் சகல அதிகாரங்களையும் உள்ளிழுக்கவே நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு;ள்ளதாகக் காணக் கூடியதாக உள்ளது. இதற்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட திவிநெகும சட்டம் சான்று பகர்கின்றது. மாகாணசபைகளின் சுதந்திரத்திலும் அதிகாரங்களிலும் கைவைப்பதாகவே மேற்படிச் சட்டம் அமைந்துள்ளது.

14.    ஆகவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுச் செயற்பாட்டை இப்பேர்ப்பட்ட ஒரு எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே நாம் காண்கின்றோம். அதாவது மத்திய அரசாங்கத்தின் கை மாகாண சபையின் நடவடிக்கைகளில் மேலோங்கும் வண்ணமாகவே ஜனாதிபதி செயலணி, மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகத் தெரிகின்றது. அதாவது தேர்தலில் வாக்களித்த பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களையும் தற்போதைய பலங்குன்றிய சட்டங்கள் அவர்களுக்கு அளித்திருக்குஞ் சொற்ப உரிமைகளையும், அதிகாரங்களையுஞ் சீரழிக்கும் வண்ணமாகவே இவ்விரு செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக நாங்கள் காண்கின்றோம்.

15.    மேலும் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த, வரும் செயற்றிட்டங்களும், திட்ட அமுலாக்கங்களும் வடமாகாண சபையின் கருத்தொருமித்தல் இல்லாது அவசர அவசரமாகக் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதந் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையும் அச்சத்துடன் அவதானிக்கின்றோம்.

இந்தப் பின்னணியில்த்தான் இதுவரை நாங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றாது இருந்து வந்தோம். அதுபற்றி அரசாங்கம் எம்மை விமர்சிக்கவுந் தவறவில்லை. ஆனால் விசித்திரமாக மன்னார், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு நாங்கள் வருவதாக அறிவித்ததும் இருமுறை அக்குழுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

என்றாலும் மக்கள் ஆக்ஞையைப் புறக்கணிக்காது நாங்கள் வடமாகாண சபையின் நிர்வாகச் செயற்பாட்டில் உள்ளிடுவது அவசியம் என்று கருதி தற்பொழுது எமது முடிவை மாற்றி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டங்களில் பங்குபற்ற முன்வந்துள்ளோம். இப்பேர்ப்பட்ட நடவடிக்கை ஊடாக எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தேசியக் கொள்கைகளைக் கட்டுப்படுத்தவும், மறு ஆய்வு செய்யவும், அவற்றின் தாக்கங்களைக் குறைக்கவும் நாம் எண்ணியுள்ளோம். எமக்கு எம் மக்களின் போரின் பின்னரான தேவைகளும், முன்னுரிமைகளுமே மிக முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. அவற்றை முன்னிறுத்தவும், முடித்துக் கொடுக்கவுமே எம்மை ஜனநாயக ரீதியில் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்களை வீணடிக்காது எவ்வளவு தான் மத்திய அரசாங்கம் தனது முகவர்களின் ஊடாக வடமாகாண மக்களின் நலன்களுக்கு எதிராக நடக்க எத்தனிப்பினும் அவற்றை முறியடிப்பதற்கே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். மாறாக மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்கவும் நாங்கள் பின்நிற்க மாட்டோம்.

ஆனால் அண்மையில் ஒரு விடயத்தை அவதானித்துள்ளோம். ஜெனிவாப் பிரேரணை அலசி ஆராயப்பட்ட போதே அதனைக் காணக் கூடியதாக இருந்தது. அதாவது அரசாங்கம் தற்பொழுது வடமாகாணத்தில் அவசர அவசரமாகப் பல திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த முன்வந்துள்ளது. நான் ஐக்கிய நாடுகள் சபை நிரந்தர வதிவாளருடன் எமது மக்களின் தேவைகள் பற்றிய கணிப்பு நடத்த வேண்டும் என்று கேட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த போது அரசாங்கம் தானாகவே உள் நுழைந்து அது பற்றிய ஒரு உடன்பாட்டில் ஐநாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

ஆகவே எமது வடமாகாணசபை இதுவரையில் என்ன செய்தது என்று கேட்போருக்கு இரண்டு பதில்கள் கூறுகின்றேன். எமது ஒவ்வொரு அமைச்சும் கடந்த ஆறு மாதங்கள் செய்த வேலைகளைக் கைநூல்களாக வெளியிடுகின்றன. அதே நேரத்தில் இன்னொன்று கூற விரும்புகின்றேன். நாங்கள் பதவியில் இருந்தால் மட்டும் போதும் - எங்கே தம்மையும் தம்; சகாக்களையும் அடுத்த தேர்தலில் மக்கள் ஓரங்கட்டி விடுவார்களோ என்ற பயத்தில் அரசாங்கம நாம் செய்ய வேண்டிய வேலைகளைத் தாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செயலாற்றத் துணிந்துள்ளார்கள். யார் நெல்லைக் குற்றினாலும் நெல் அரிசியாக வேண்டும். எமது மக்களின் விமோசனமே எமக்கு முக்கியம் என்று கூறி எனது சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணசபை