Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, March 8, 2014

வடமாகாணத்தில் பெண்களின் 


பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது


;சி.வி

-சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா

வடமாகாணத்தில் இராணுவ மயமாக்கல் காணப்படுவதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறிய விடயமாகவுள்ளதாகவும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் காவல்துறை அசண்டயீனமாகச் செயற்படுவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினமான நேற்று, விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வை நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'வடமாகாணத்தில் யுவதிகள் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் இணைக்கப்படுகின்றார்கள். வீடுவீடாக இராணுவத்தினர் சென்று யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு வற்புறுத்துகின்றமையை நான் அறிகின்றேன். ஏன் இவர்கள் பெண்களை மட்டும்; இராணுவத்தில் இணைத்துக் கொள்கிறார்கள், ஆண்களை இணைத்துக் கொள்ள முனையவில்லை.

எனவே பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்கிடமாகவுள்ளது. இந்நிலையில் பெண்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் அத்தோடு அரச வேலைகளில் வயதெல்லைப் பிரச்சினையினையும் இவர்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

சமூக, கலாச்சார முறைகளில் பெண்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இளம் தாய் விதவைகளின் சமூகப்பாதை மாற்றப்படவேண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட எம் சகோதரிகள் சமூகத்தில் முன்னுக்குவர வேண்டும். விதவைகள் வாழ்வாதார சீர்செய்யப்படவேண்டும்.

காணாமற்போன உறவுகளின் பெண்களின் நிலையினை பற்றி சொற்களில் அடக்கிவிடமுடியாது. தடுப்புச் சிறையில் உள்ள பெண்கள் தாம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக எனக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். எம் சகோதரிகளுக்குத் தேவையான உதவிகளை நாம் செய்வோம் என்று கூறினார்.

வடமாகாணத்திலும் இந் நாளை விழாவாகக் கொண்டாட முடியும். ஆனால் அண்மையில் எமக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தங்களைக் கருத்தில் எடுத்து இந்தத் தினத்தை வெறும் விழாவாகக் கருதாமல் எமக்குப் பயனுள்ளதாக மாற்றி அமைப்பது தலையாய கடமையாக மாறியுள்ளது.

எமது வடமாகாணமானது கிழக்கு மாகாணத்துடன் சேர்ந்து போரில் இருந்து அண்மையில் விடுபட்டு வந்துள்ளது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே.எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் அடிப்படை உட்கட்டுமானங்களைப் பற்றியே இதுவரைகாலமும் பொதுவாகச் சிந்தித்து வந்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டை வலியுறுத்தும் திட்டங்கள் குறைவாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்நிலையைக் கருத்தில் எடுத்து எமது தமிழ்ப் பேசும் பெண்களின் வருங்காலம் பற்றி ஆராய வேண்டியது எமது கடப்பாடாக இன்று மாறியுள்ளது.

இங்கு தான் உங்கள் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவிமார்களின் வாழ்க்கை பற்றி ஆராய்ந்தறிவதில் கரிசனை காட்டி வந்துள்ளீர்கள். இப்பேர்ப்பட்ட பெண்கள் போரினால் மனோநிலையளவிலும், சமூக நிலையளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே அப்பெண்களுக்கான வாழ்வாதாரச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் அலசி ஆராயப்பட்டுள்ளது.

தற்போதிருக்கும் கடன் வசதி நிலைகளின் போதாமை குறித்து ஆராய்ந்துள்ளீர்கள். மேலும் பல விடயங்கள் உங்கள் ஆராய்ச்சிகளின் வாயிலாக அறிய வந்துள்ளோம். மேலும் செய்யப்பட வேண்டிய விடயங்கள் பற்றியும், எமது கடப்பாடுகள் பற்றியும் ஆராய்ந்துள்ளீர்கள். இவை யாவையும் வடமாகாண நிர்வாகத்தை வழிநடத்திச் செல்ல உதவி புரிவன என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கத் தேவையில்லை.

பெண்கள் பலரின் தேர்தல் காலப் பெரும் பங்காற்றலே எமது வடமாகாணசபை வெற்றி என்பதில் எமக்கு ஐயமேதுமில்லை. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது எமது தலையாய கடன் என்பதை நாங்கள் உணர்ந்தே வைத்துள்ளோம். பல நிதி மூலங்கள் அவர்கள் வாழ்வாதாரங்களை முன்னின்று மேம்படுத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. பெற வேண்டியவற்றைப் புறத்தலையீடுகள் இன்றிப் பெற்றுக் கொள்ள முடியுமோ என்பதில் தற்பொழுது கரிசனையாக உள்ளோம். முயன்று முன்னேறுவோம் என்ற திடநம்பிக்கை எமக்குண்டு. எமது திட்டங்களை உங்களுக்கு எடுத்துரைப்பது அவசியம் என்று கருதுகின்றேன்.

பெண்கள் தமக்குத் தாமே ஆற்றலளிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அவற்றை மனதில் வைத்தே கடந்த இடர்க் காலங்களில் சுழற்சி முறைக்கடன், சுயதொழில் உற்பத்தி போன்றவற்றை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் நடைமுறைப்படுத்தி வெற்றியுங் கண்டுள்ளன. சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்களில் பெண்களை மட்டுமே வைத்து இயங்கி அங்கும் வெற்றியை நாம் கண்டுள்ளதாக அறிகின்றேன்.
அதே நேரத்தில் எங்கள் பெண்களின் சேமிப்புப் பழக்கத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் வகையில் தென்னிலங்கையைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்கங்கள் வடமாகாணத்திலும் உதவிக்கரம் நீட்டுவது போல் உள்நுழைந்து வெளிநாட்டு நிதிஉதவிகளைப் பெற்று அதேநேரம் அந்த நிதி வாய்ப்புக்களை தம்வசப்படுத்த எத்தணிப்பதாகவும் எமக்கு அறியத்தரப்பட்டுள்ளது.

இது பற்றி எமது பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அதேநேரம் வடமாகாணப் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமக்கென ஒரு கூட்டுறவுச் சங்கத்தை அவர்களே உருவாக்கிக்கொள்ள வேண்டிய காலம் இப்பொழுது கனிந்துள்ளது. எமது வடமாகாணசபை இதற்கான முழு ஒத்துழைப்பையும் உங்களுக்குத் தர உறுதி பூண்டுள்ளது. என் பரிபாலனத்தின் கீழ்வரும் கூட்டுறவு சம்பந்தமாக எமது சபையில் கடமையாற்றும் செயலாளர்கள் பெண்களே என்பதையும் இத்தருணத்தில் சொல்லி வைக்கின்றேன்.

இன்று நவீன சமூக, பொருளாதாரக் கலாசார மாற்றங்களாலும், மரபு சார்ந்த கூட்டுறவுக்குடும்ப வாழ்வு அருகி வருகின்றமையினாலும் போரானது எமது வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பலவித அனர்த்தங்கள், அவலங்கள், அல்லல்கள் காரணமாகவும் பெண்களின் சுமை பல்மடங்கு மேலோங்கியுள்ளது. பெண்களால் நிர்வகிக்கப்படும் பல குடும்பங்களில் அவர்கள் தமது வருமானங்கள் அனைத்தையும் தமது குழந்தைகளின் நலனுக்காகவே பாவிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் அவர்களின் வருமானங்களைக் கூட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அவர்களின் வறுமை நிலையைப் போக்க ஆவன செய்ய வேண்டியுள்ளது.

முக்கியமாக வன்னிப் பெருநிலத்தில் நிலைமை மாற்றமடையவில்லை என்றே கூறலாம். பெண்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லாமையினால் அவர்களின் இயற்கையான சுதந்திர நடமாட்டம் தடைப்படுத்தப்பட்டுள்ளது. பல பெண்குழந்தைகள் கல்வி, தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள இப்பாதுகாப்பின்மை தடையாக இருந்து வருகின்றது. மருத்துவ வசதிகளை நாடிச் செல்வது கூடத் தடைப்பட்டுள்ளது. இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகள், பாலியல் தொந்தரவுகள் காவற்துறையினரால் அசட்டையுடனேயே கையாளப்படுகின்றன.

அண்மையில் இராணுவத்திற்குத் தமிழ்ப் பெண் யுவதிகளைச் சேர அழைத்துள்ளார்கள். ஏன் ஆண்களை அழைக்கவில்லை என்ற கேள்வி உடனேயே எழுகின்றது. அது மட்டுமல்ல. இளம்பெண்களை வீடுவீடாகச் சென்று வலிந்து இராணுவத்தினர் அழைப்பதாக எமக்குச் செய்திகள் வந்துள்ளன. பயம், வறுமை, பாதுகாப்பற்ற தன்மை போன்ற பல காரணங்கள் எம் பெண்களை இராணுவத்தினுள் உள்ளீர்க்கப்படக் கூடும். ஆனால் மேலிடத்து ஆணைகளை நிறைவேற்றுவதே இராணுவக் கீழ்மட்டச் சிப்பாய்களின் கடமை என்பதை இந்த யுவதிகள் தெரிந்திருக்கின்றார்களா என்பது எமக்குத் தெரியாதிருக்கின்றது.

அடுத்து வீட்டத்திட்டங்கள் போரினால் பாதிக்கப்பட்ட வசிப்பிடங்கள் தேவையுள்ள பெண்களின் நலனை முன்வைத்து இயங்குவதாகத் தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் இவ் வீட்டுத் திட்டங்களில் வீடுகளைப் பெறுபவர்கள் அரசியல் அடிவருடிகளேயன்றி அடிப்படைத் தேவையுள்ளவர்கள் அல்ல என்பது அறியப்பட்டுள்ளது. வீடுகளைக் கட்டப் போதியவாறு பணவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பதுந் தெரிய வந்துள்ளது.

வாழ்வாதாரக் குறைபாடுகள் பலவற்றைப் பெண்கள் எதிர் நோக்குகின்றனர். கடன் வசதிகள் பெறலில் ஏற்படும் சிக்கல்கள், போதிய வினைத்திறன்களைப் பெறுவதற்கான பயிற்சி பெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளும், சிரத்தையின்மையும், அரச நிறுவனங்களில் வயதெல்லையால் ஏற்படும் சிக்கல்கள் என்று பல சிக்கல்களுக்கும் தடைகளுக்கும் முகங கொடுக்க வேண்டியுள்ளது.

காணிகள், வீடுகள் இருந்தும் இல்லாத நிலை. அதாவது போர்க் காலத்தில் காணி உறுதிகள், உரிமைகள், ஆவணங்கள் போன்றவை தொலைந்து போனதால் அல்லது அழிந்து போனதால் ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகள்.

அரசாங்கத்தின் வறுமை போக்குந் திட்டங்கள், மானிய உதவித் திட்டங்கள் போன்றவை வெளிப்படைத் தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குறைபாடு.

மனவளக் குறைபாடு உடையவர்கள், குறை வளர்ச்சிப் பிள்ளைகள், போரின் போது உடல் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரின் நலம் பற்றிப் போதிய சிரத்தை காட்டப்படாதிருத்தல்.

இவ்வாறு யதார்த்த நிலை மன வேதனை அளிப்பதாகவே காணப்படுகின்றது. மக்களின் மனமறிந்து சேவை செய்ய முன்வந்திருக்கும் எமது சபை அங்கத்தவர்கள் கூடத் தடைகளை விலக்கி முன்னேற முடியாதவாறு பல கட்டுப்பாடுகளும், பிணிப்புக்களும் அவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றை விட சமூக, கலாசார ரீதியாகப் பெண்கள் போரின் பின்னர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இளம் விதவைகள் பாடு, அதுவும் குழந்தைகளுடன் இருக்கையில் கணவன்மார்களை இழந்த பெண்களின் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றது. முன்னைய பெண் போராளிகளும் பல சமூகப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. எமது தமிழ்ச் சமூகமானது இவர்கள் யாவரையும் ஒதுக்கி வாழத் தலைப்படுவது எமது பாரம்பரியத்திற்கு ஒரு பெரும் இழுக்காகவே அமைகின்றது. எனவே எமது சமூகப் பார்வை மாற்றப்பட வேண்டும்.

எவ்வாறு காந்திஜி தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் இறைவனின் குழந்தைகள் என்று அடையாளங் கண்டு அவர்களை 'ஹரிஜனங்கள்' என்று அழைத்தாரோ அதே போல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடர்ப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள எங்கள் சகோதரிகள் அத்துடன் யுத்தத்தில் கலந்து அதன்பின் கைதாகி வெளிவந்துள்ள எமது சகோதரிகள் 'வீர மகளிர்' என்று அடையாளப்படுத்தப்பட்டு எமது மக்களின் மரியாதைக்கும், மாண்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும். இப்பெண்கள் தற்பொழுது தம் சுயமரியாதையை இழந்து வாழத் தலைப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதனால் பல கலாசாரச் சீரழிவுகளுக்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். விதவைகள் வாழ்க்கை முற்றிலும் சீர் செய்யப்பட வேண்டும்.

அதே நேரம் காணாமற் போன தமது மகன்மார்களை, சகோதரர்களை, கணவன்மார்களைத் தேடிக் கொண்டிருக்கும் பெண்களின் அவலங்கள் சொல்லில் வடிக்க முடியாதன. ஒருவர் இறந்துவிட்டார் என்றால் சில நாட்களில் அந்த இறப்பை ஏற்கும் மனப்பக்குவம் எமக்கு ஏற்பட்டுவிடும். ஆனால் ஒருவர் உயிருடன் இருக்கின்றாரா, இல்லையா என்ற ஐயப்பாட்டுடன் வாழ்வது மிகச் சிரமமானது.

பல விதங்களில் காணாமற்போனோர் பற்றி நாமும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். ஆனால் அவை போதுமானதாகத் தெரியவில்லை. காணாமற் போனோர் பற்றிய புகைப்படங்கள், விபரங்கள் ஆகியன வாராவாரம் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் பிரசுரம் பெற நடவடிக்கைகள் எடுத்தால் என்ன என்று நான் எண்ணுவதுண்டு. காணாமற் போனதாகக் கூறப்படும் யாராவது ஒருவர் உயிருடன் இருக்கின்றார் என்பது எவரேனும் ஒருவருக்குந் தெரிய வந்தால் அது பற்றி உரியவர்களுக்குத் தெரியப்படுத்த வசதிகள் செய்து கொடுத்தால் என்ன என்றும் நான் சிந்திப்பதுண்டு. இது பற்றி மக்கள் தான் சிந்தித்து எம்முடன் சேர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்புக் காவலில் சிறையில் உள்ள பலர் தமக்குப் போதிய சட்ட உதவி இல்லை என்று எனக்கு அறிவித்திருந்தார்கள். அது சம்பந்தமாக உதவி தரக்கூடிய சட்டத்தரணிகள் ஒன்று சேர்ந்து ஒரு சட்ட உதவிக்குழு ஒன்றை அமைக்க முன்வர வேண்டும். ஏதேனும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து இதற்கான நிதி உதவியினை நாம் பெற்றுக் கொள்ளலாம்.

ஐ.நா பாதுகாப்புச் சபைப் பிரேரணைகளின் அடிப்படையில் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதத்தில் மகளிர் விவகார அலகை உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் என்பதை இத்தருணத்தில் கூறிவைக்கின்றேன்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் 8 ந்திகதி வரும் போது இவ்வாறான நற்செயல்களை பெண்கள் நல்வாழ்வு கருதிச் செய்தோம் என்று நாம் பெருமையுடன் பேசக் கூடியதாக நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என அவர் மேலும் கூறினார்.