2013-12-06 16:53:09 | General
பிறிடொரியா: தென்னாபிரிக்காவின் ஜொகனர்ஸ் பேர்க் மற்றும் சொவேடோ ஆகிய நகரங்களில் திரண்டிருந்த பல இலட்சம் மக்கள் தமது முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மண்டேலாவின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட ஒருசில மணித்தியாலங்களில் அவரது முன்னாள் இல்லத்தின் முன்பு கூடிய மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், ஆடியும் பாடியும் முழு இரவையும் கழித்தனர்.
பிந்திய இரவில் தேசிய தொலைக்காட்சி மூலம் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகொப் சுமா மண்டேலாவின் மரணச் செய்தியை அறிவித்ததனை அடுத்து கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.
நெல்சன் மண்டேலா வளர்ந்த கிழக்கு கேப்பின் குனு கிராமத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னர் தலைநகர் பிறிடோரியாவில் மூன்று தினங்கள் அவரது உடல் நாட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
தென்னாபிரிக்க வரலாற்றின் சிக்கல் நிறைந்த தருணத்தில் நெல்சன் மண்டேலாவை ஜனாதிபதியாக்கியதன் மூலம் இறைவன் மிகவும் நல்லவராகின்றாரென தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி மண்டேலாவின் நீண்டகால நண்பரும் ஆயருமான டெஸ்மண்ட் டுட்டு கூறியுள்ளார்.
மண்டேலாவின் மரணச் செய்தி வெளியானதும் 1940, 1950 களில் மண்டேலா வசித்துவந்த வீட்டின் முன்னர் சொவெடோ விலகாஷி வீதியில் கூடிய மக்கள் நிறவெறியுக பாடல்களை பாடியும் ஆடியும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
அவர் வளர்ந்த, வசித்த வீட்டில் எம்மால் அவரைக் காண முடியவில்லை என்ற பாடல் வரிகளையும் அம்மக்கள் பாடியிருந்தனர்.
அவரது வாழ்க்கையினை நாம் கொண்டாடுகின்றோம். எமக்காக அவர் செய்த பணிகளை கொண்டாடுகின்றோம் என அங்கு கூடியிருந்த மக்களில் ஒருவர் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்காவிலுள்ள பொது இடங்களில் அனுதாப புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெளிநாடுகளிலுள்ள தென்னாபிரிக்க தூதரகங்களிலும் அனுதாப பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவின் உத்தியேகாபூர்வ அஞ்சலி நிகழ்வுகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றது. சொவெட்டோவின் FNB அரங்கில் பாரிய அஞ்சலி நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
14 ஆம் திகதி சனிக்கிழமை இறுதி சடங்குகள் இடம்பெறுவதற்கு முன்னர் பிறிடோரியாவிலுள்ள அரச கட்டிடம் ஒன்றில் அவரது உடல் மூன்று தினங்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
சர்வதேச அளவில் தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள் , இராஜதந்திரிகள், பிரபலங்கள், ஆர்வலர்கள் என்ற அனைவரும் கலந்து கொள்ளும் இதுபோன்ற தேசிய மரணச் சடங்கு ஒன்றினை தென்னாபிரிக்கா ஒருபோதும் கண்டிருக்கவில்லையென பி.பி.சி. கூறியுள்ளது.
குணு கிராமத்தில் உலகத் தலைவர்களின் வருகைக்கு ஏற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் கடினமான விடயமெனவும் ஜொகனஸ்பேர்க் பி.பி.சி. செய்தியாளர் மைக் வூல்ட்ரிச் கூறியுள்ளார்.
TOTAL VIEWS : 172
- See more at: http://www.thinakkural.lk/article.php?world/tqxojjczoj26863a0844cee478767oyhxfcf57de0c71e9ad3035478eejlb#sthash.TakoXj9j.dpuf