அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுக்கு தயார். சுமந்திரன் அறிவிப்பு- UNP மீதும் குற்றச்சாட்டு:-

28 ஆகஸ்ட் 2014
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இருதரப்பு பேச்சுக்கு தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பேச்சை ஆரம்பிக்குமாறு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பேச்சை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூட்டமைப்பன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த சுமந்திரன் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் இருப்பதால் கூட்டமைப்புடன் பேச முடியாது என அரசாங்கம் முன்னர் கூறுவதாகவும் ஆனால் நிரந்தரமான உறுதியான அரசியல் தீர்வு ஒன்றுதான் கூட்டமைப்பின்; நோக்கம் எனவும் சுமதந்திரன் குறிப்பிட்டார்.
நாட்டைப் பிரிக்காத ஐக்கிய இலங்கைக்குள் சிறந்த அரசியல் தீர்வு ஒன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது. நாட்டை துண்டாடும் நிகழ்ச்சி நிரல் கூட்டமைப்பிடம் இல்லை என்றும் கூறிய சுமந்திரன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் நம்பக்கையளிப்பதாகவும் கூறினார்.
அதேவேளை ஐக்கியதேசிய கட்சியின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த சுமந்திரன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான சரியான ஒழுங்கமைப்புகள் இன்றி ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என ஐக்கியதேசிய கட்சி எதிர்ப்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த மனோ கணேசன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.
வாக்குறுதிகளை மீறி மக்களை ஏமாற்றி சர்வதேச நாடுகளையும் ஏமாற்றி சர்வாதிகார ஆட்சி செய்யும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறிய மனோ கணேசன் 18 தடவைகள் இந்த அரசாங்கத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேச்சு நடத்தி களைத்துப் போய் விட்டது என்றும் இனிமேலும் இந்த அரசாங்கத்தை கூட்டமைப்பு மாத்திரமல்ல தமிழ் மக்களும் நம்பமாட்டார்கள் என்றும் கூறினார்.