Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, March 28, 2014

சுயாதீன விசாரணையில் இலங்கைக்கு ஆபத்து
logonbanner-1essayஇலங்கை அரசின் நூறு வரையான ஆதரவாளர்கள் கடந்த வாரம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், இந்துக்களின் சமய முறைப்படி அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தேங்காய்களை உடைத்தனர்.
எமது நாட்டின் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் அமெரிக்காவை ஒரு போதும் அனுமதியோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்போது தெரிவித்தனர். 
இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால், இலங்கை அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த மறுநாள் இலங்கையிலிருந்து பல மைல்கள் தொலைவிலுள்ள அமெரிக்காவிலிருந்து அதன் இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர்  இலங்கையில்  மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார். 
இலங்கையின் நீண்ட உள்நாட்டுப் போரின் போது அதில் பங்குகொண்ட இரு தரப்புக்களாலும் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காகத் தமது வாழ்வைப் பணயம் வைத்துத் துணிந்து செயற்படும் தனது சொந்தக் குடிமக்களான இலங்கையர்களுக்கு எதிராக இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மிகவும் மோசமானவையாகும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வரைவுக்கான வாக்களிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இடம்பெறவுள்ள நிலையில், ஏற்கெனவே இது தொடர்பில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தீவிரம் பெற்றுள்ள முறுகல் நிலை மேலும் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அதாவது இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையை அனைத்துலக சமூகம் ஆரம்பிக்குமா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கான வாக்களிப்பே இன்று  இடம்பெறவுள்ளது. 
இலங்கையில் கைதுசெய்யப்பட்ட முதன்மை மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான றுக்கி பெர்னாண்டோவும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாட்டுக்கான மையத்தின் இயக்குநரும் கத்தோலிக்க மதகுருவுமான வணக்கத்துக்குரிய பிரவீன் மகேசன் அவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இலங்கை காவற்துறையினரால் விடுவிக்கப்பட்டனர். 
தடுத்து வைக்கப்பட்ட இவ்விருவரும் தடுப்பிலிருந்த மூன்று நாள்களும் வெளிநாட்டு ஊடகங்களுடன் பேசுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இவர்களது கணினிகள் மற்றும் கைத்தொலைபேசிகளின் "சிம்' அட்டைகளையும் கையளிக்குமாறு கட்டளையிடப்பட்டிருந்து. 
இலங்கை அரசிடம் சரணடைந்து காணாமற் போனவர்களின் உறவுகளுக்காக முன்னின்று செயற்படும் ஜெயக்குமாரி பாலேந்திரன் தற்போதும் இலங்கை அரசின் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மனித உரிமைச் செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ, வணக்கத்துக்குரிய பிரவீன் மகேசன் மற்றும் ஜெயக்குமாரி பாலேந்திரன் ஆகிய மூவரும், இலங்கை அரசின் தடுப்பிலிருந்து தப்பிச் சென்று நோர்வேயில் முகாமிட்டுள்ள ஆயுததாரியான கே.பி.செல்வநாயகத்துடன் தொடர்பைப் பேணுகிறார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தது. 
இந்த மூன்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கைதுசெய்யப்பட்ட புலிகளின் முன்னாள் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சியில் வெடிமருந்துகளை மறைத்து வைத்திருந்ததாகவும் இலங்கை அரசு குறிப்பிட்டிருந்தது. மோட்டர்கள், கைக்குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் உட்பட வெடிமருந்துகளை ஒளித்து வைத்திருந்தனர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டனர். 
இவர்கள் கைது செய்யப்பட்டமையை மனித உரிமை அமைப்புக்கள் பல கண்டித்ததுடன், தற்போது தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருமதி பாலேந்திரன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. 
தான் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரணதுங்க கடந்த வாரம் முறையிட்டுள்ளார். 
இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான கைதுகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை எதிர்த்து நிற்பதற்கான வலுவை அரசுக்கு வழங்குமா எனவும் இலங்கை அரசு தனக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தானே உறுதிப்படுத்த முயற்சிக்கிறதா எனவும் கொழும்பிலுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்று இயக்குநர் பாக்கியசோதி சரவணமுத்து கேள்வியெழுப்பியுள்ளார். 
இலங்கை காவற்துறையினர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏனைய உலக நாடுகளுக்கு விளக்கும் வகையில் இலங்கை அரசு தனது இராஜதந்திரக் குறிப்பொன்றை அனுப்பியுள்ளது. 
போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும் கூட, சாத்தியப்பாடான போர்க் குற்றவிசாரணைகளுக்குப் பொறுப்பளிக்க வேண்டும் என இலங்கை அரசு சிறிதளவேனும் கருதவில்லை. 2009 இல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 
இலங்கையால் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில் நாட்டில் கிளர்ச்சிகள் தோன்றக் கூடும் என அனைத்துலக சமூகம் அச்சம் கொள்கிறது. இந்த நிலையில், இலங்கை அரசின் இழுத்தடிப்புக்கள் தொடர்பில் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் பொறுமை இழந்துள்ளதுடன், அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. 
நாட்டில் நீண்ட காலம் தொடரப்பட்ட போரை  முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற ரீதியில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்­ச பிரபல்யம் பெற்றுள்ளார். போர் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது. 
ஆனால் போர்க் கால மீறல்களை விசாரணை செய்வதற்கான சுயாதீன விசாரணையானது இலங்கை அதிபருக்கும் அவரது சகோதரர்களில் குறைந்தது ஒருவருக்காவது அதாவது இராணுவத்தை வழிநடத்திய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்­சவுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக அமையலாம்.