Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, March 6, 2014

எல்லை மீறினால் எதுவும் நடக்கலாம்
logonbanner-1essay06 மார்ச் 2014, வியாழன்
உலகநாடுகளில் உள்நாட்டுப் போர்கள் இடம்பெறுவது ஒன்றும் புதியவிடயமல்ல. ஆட்சியாளர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றதொரு நிலை ஏற்படும்போது, மக்கள் தமது உயிரையும்
துச்சமென மதித்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர். 
இந்தப் போராட்டங்கள் காரணமாக ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. சில நாடுக ளில் வெளிநாடுகளின் தூண்டுதலின்பேரில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாவதும் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது அந்த நாட்டு மக்கள் தான் என்பது வேதனையை அளிக்கின்றது.
ரஷ்யாவில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஸார் மன்னனுக்கு எதிரான உள்நாட்டுப் போர் மிகவும் பிரசித்தி பெற்றது. இதைப் போன்றே மாவோ சேதுங் தலைமையில் சீன நாட்டின் அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்ட போரும் இன்றளவும் விதந்து பேசப்படுகின்றது. பிரெஞ்சுப் புரட்சி, ஈரான் மக்களின் எழுச்சி, உகண்டா நாட்டின் கொலைவெறி பிடித்த கொடூரன் இடி அமீனை நாட்டை விட்டே  துரத்திய மக்களின் கிளர்ச்சி என்பன நினைவில் நிற்கக் கூடியன.
சூடானின் உள்நாட்டுப் போர் அந்த நாட்டை இரு கூறுகளாகப் பிரிப்பதற்கு அடிகோலியது. இவ்வாறு பல ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டுப்  போர்கள் காரணமாகப் புதிய நாடுகள் உதயமாகின.
அண்மையில்  கூட லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது சிரியா உள்நாட்டுப் போர் காரணமாக வரலாறு  காணாத உயிரிழப்புக்களை எதிர்கொண்டு வருகின்றது. அங்கும் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன.
ஆனால் வல்லரசுகள் தமது விருப் பதுக்கு ஏற்ற வகையில் ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்க ளில் மூக்கை நுழைத்துக் குழப்புவதுதான் கவலையை அளிக்கின்றது. 
அமெரிக்கா மீதான தாக்குதலின் சூத்திரதாரியான ஒசாமா பின்லேட னுக்கு அடைக்கலம் அளித்துக் காப்பாற்றியதைக் காரணமாக வைத்து அமெரிக்கா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது போர் தொடுத்து அங்கு ஆட்சி புரிந்த தலிபான்கள் தலைமையிலான அரசுக்கு சாவுமணி அடித்தன. 
ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த ஒசாமாவும் பின்னாளில் அமெரிக்கப் படைகளால் ஈவு இரக்கமற்ற வகையில் கொல்லப்பட்டார். தாய்லாந்தில் கூட ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பல்லாயிரக் காணக்கான மக்கள் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு அரசு இயந்திரம் ஸ்தம்பிக்க வேண்டியதொரு நிலையும் உருவானது.
மிகக் கடைசியாக உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டம் தொடர்பான செய்திகள் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. 
அங்கு ஆட்சியில் இருக்கும் அரசுக்கு ரஷ்யா முண்டு கொடுத்து வருவதால் பூரணமான ஆட்சி மாற்றம் அங்கு ஏற்படவில்லை. தென் அமெரிக்க நாடுகளான பிரேஸில், ஆர்ஜன்ரீனா ஆகியவற்றிலும் அவ்வப்போது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்த்து ஆர்ஜன்ரீனாவிலும், உலகக் கிண்ண  உதைபந்தாட்டப் போட்டிகள் பிரேஸில் அதிக பொருள் செலவில் இடம்பெற விருப்பதை எதிர்த்து அந்த நாட்டிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேர்மையான தேர்தல் ஒன்றை வலி யுறுத்தி தேசத்தில் நிகழ்ந்த மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலைதீவில் கூட மக்களால் அந்த நாட்டின் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப முடிந்துள்ளது. தற்போதைய உலக பொருளாதாரத் தின்மந்த நிலை காரணமாக மக்களின் வாழ்க்கை பெரும் பிரச்சினைகள் மிகுந்ததாக மாறியுள்ளது. 
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என்பன எவ்வித கட்டுப்பாடுமின்றி உயர்ந்து செல்வ தால், மக்கள் பொறுமையிழந்த நிலையில் காணப்படுகின்றனர். இதன் விளைவாகவே போராட்டங்களும் இடம் பெற்று வருகின்றன.
எமது நாட்டில் கூட 30 ஆண்டுகளாக  கொடிய  உள்நாட்டுப் போர் ஒன்று இடம்பெற்று முடிவடைந்துள்ளது. அநேகமான நாடுகளில் போர் இடம் பெறும்போது சொல்லொணாத் துன்பங் களை அனுபவிக்கும் மக்கள் போர் ஓய்ந்ததன் பின்னர் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவது வழமையாகும். 
அந்த நாடுகளின் அரசுகளும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வுக்கான செயற்பாடுகளில் முழு வீச்சுடன் ஈடுபடுவது வழமையாகும். உதவிகள் யாவும் பாரபட்சமின்றிப் பகிர்ந்தளிக்கப்படுமாயின், மக்களின் இயல்பு நிலையில் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாகக் காணப்படும்.
ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் போர் ஓய்ந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் வேளையிலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் இன்னமும் அவலநிலை காணப்படுகின்றது. போர் காரணமாக இடம் பெயர்ந்த மக்களில் கணிசமானோர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் அவலவாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தால் மீள்குடியமர முடியாத நிலை யிலும், தமது வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாத நிலையிலும் இவர்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். 
பாதிக்கப்பட்ட மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பறிக்கப்பட்டுள்ளதுடன், அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகள் அவற்றைப் பிறருக்கும் தமது இஷ்டம்போல வழங்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கு இவர்களால் முடியவில்லை. 
படையினரின் பிரசன்னம் எந்த இடத்திலும் நீக்கமற நிறைந்து காணப்படுவதால் வாயைத் திறப்பதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். அந்நிய நாடொன்று போர்தொடுத்து நிலங்களைப் பறிக்குமாயின் தமது நாட்டு அரசு அவற்றை எப்போதாவது மீட்டுத்தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருக்க முடியும். ஆனால் இங்கு வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருப்பதுதான் கொதிக்கும் எண்ணெயைக் காதுகளில் ஊற்றுவதைப் போன்றதொரு கடுமையான வேதனையைத் தருகின்றது.
ஒரு நாட்டின் அரசு அங்கு வாழும் சகல இனங்களையும் சமமாகப் பார்க்கும் தார்மீகப் பொறுப்பைக் கொண்டுள்ளது. இதைவிடுத்து, ஒரு கண்ணில் வெண்ணெயும் மறுகண்ணில் சுண்ணாம்பும் என்ற ரீதியில் நடந்து கொண்டால் காலம் காலமாக அங்கு பிரச்சினைகள் ஏற்படவே வழி அமைக்கும்.
ஒரு வீட்டில் அநியாயம் நடக்கும்போது அயல் வீடுகளில் இருப்பவர்களால் தொடர்ந்து அதனைச் சகித்துக் கொள்ள முடியாது.  எல்லை மீறும் பட்சத்தில் அதில் தலையிடவே அவர்கள் முயல் வார்கள். எமது நாட்டைப் பொறுத்த வரையிலும் இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதன் விளைவுகளை எதிர் காலம் நிச்சயமாகத் தீர்மானிக்கும்.