
11 ஏப்ரல் 2014

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என கூறப்பட்ட கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று (10) இரவு இராணுவத்தினரது சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களில் கோபி மற்றும் தேவிகன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
எனினும் உயிரிழந்த மூன்றாம் நபர் அப்பனாக இருக்கக் கூடும் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து அந்த இயக்கத்தினை மீளவும் புத்துயிர் செய்யும் நடவடிக்கைகளை கோபி மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டி கோபியை தேடி வந்தனர்.
கோபி கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்ததாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.
கடந்த மாதம் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும் கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கோபிக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோபியின் தாய் என கூறப்படும் 83 வயதான திருமதி. ராசமலர் என்பவர் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை கோபியின் மனைவி என கூறப்படும் இளம் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜெயக்குமாரி வீட்டில் ஆரம்பித்த நாடகம் வெலி ஓயாக் காட்டுமுற்றுகை மோதல் என்றதகவலுடன் முடிவுறுகிறதா?
இலங்கை இராணுவத்தினால்; தேடப்படுவதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் மூவர் இன்று அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக இலங்கைப் படைத்தரப்பினால் தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன.
முல்லைதீவு வெலிஓயா காட்டுப்பகுதியில் கடந்த ஜந்து நாட்களாக நடத்தப்பட்ட முற்றுகையில் இவர்கள் nhல்லப்பட்டு உள்ளதாகவும் இம்;மோதலில் படைத்தரப்பினை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாகவும் படைத்தரப்பின் ஊடாக வெளியாக்கப்பட்டுள்ள செய்திகள் கூறுகின்றன.
விடுதலைப் புலிகளிற்கு புத்துயிர் வழங்கி மீளக்கட்டமைக்க முற்படுவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினால் அறிவிக்கப்பட்ட கோபி மற்றும் அப்பன் ஆகியோருடன் தேவியன் ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கைப் படைத்தரப்பினால் கசியவிடப்பட்ட இந்த தகவல் கூறுகிறது. ஏற்கனவே இவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு கோரி தலா ஒரு மில்லியன் பரிசு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களிற்கு உதவியதாக தெரிவித்து பதினொரு பெண்கள் உள்ளிட்ட 65 பேர் வரையில் கைதாகியுள்ளனர்.
கைதானவர்களது தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த வெலிஓயா காட்டுப்பகுதியினுள் பதுங்கியிருந்த வேளையே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இம்முற்றுகை ஜந்து நாட்களாக நீடித்ததாகவும் படைத்தரப்பின் பக்கமாக இருந்து வெளியாகிய தகவல் கூறுகிறது. எனினும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாத இலங்கைப் பாதுகாப்பு தரப்பினரோ அல்லது அரசாங்கமோ எதற்காக இப்படியான ஒரு தகவலை கசிய விட்டு இருக்கிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் குளோபலுக்கு தெரிவித்தார்.
இதனிடையே இலங்கை அரசு தேடுவதாக அறிவித்த வான்புலிகள் அமைப்பின் பிரமுகரான தெய்வீகன் பாதுகாப்பாக கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே மீனவர்கள் சிலர் கைதாகியுள்ளதாகவம் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
எது எப்படி இருப்பினும் இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த புலி நாடகம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் இலங்கை அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை எழுப்பிய நிலையில் இந்த நாடகத்தை முடிவுறுத்த வேண்டிய தேவை இலங்கைப் பாதுகாப்பு தரப்பிற்கு அவசியமாக இருந்தது.
இந்த நிலையில் ஜெயக்குமாரி, மற்றும் விபூசிகா ஆகியோரது கைதுடன் ஆரம்பிக்கப்பட்ட தொடர்நாடகத்தை முடிவுக்கு கொண்டுவந்து, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட 65 பேரது கைதை நியாயப்படுத்தவும், புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு காரணம் கூறவும், சர்வதேச விசாரணையை கேள்விக்கு உட்படுத்தவும் வெலிஓயா முற்றுகை நாடகத்தையும் பாதுகாப்பு படைத்தரப்பு அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் பலமாக தோன்றியுள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.
இந்த நிலையில் கதை, வசனம், இயக்கம், நடிப்பு என அனைத்தையும் மேற்கொள்ளும் அரசாங்கத்தினதும் பாதுகாப்பு, மற்றும் புலனாய்வுத் தரப்பும் இவ்வாறான செய்திகளை கசிய விடும் போது அதன் பலபக்கங்களை ஆராய்வது இன்றி அமையாதது என தெரிவிக்கப்படுகிறது.
2ஆம் இணைப்பு - நெடுங்கேணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் கோபி மரணம்?
நெடுங்கேணி பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேடடையில் தேடப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபரான கோபி உயிரிழந்திருக்கலாம் என கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நேற்றிரவு நெடுங்கெணி பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் விசேட சுற்றி வளைப்பு தேடுதல் வேட்டை ஒன்றை நடாத்தியுள்ளனர்,
இந்த தேடுதல் வேட்டையின் போது சந்தேக நபர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதுடன். ஒரு புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரும் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது,
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதவிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணையச் செய்ய கோபி முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,
கோபி பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு பத்து லட்ச ரூபா சன்மானம் வழங்குவதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் இதுவரையில் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை.
சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள், உயிரிழந்தர்களில் கோபியும் உள்ளடங்குகின்றாரா என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.