இசைப்பிரியாவையும் அவர்போன்ற போராளிகளையும் வியாபாரம் ஆக்காதீர்கள்:- திரைப் படத்தை நிறுத்துங்கள்:-
தாயார் வேதரஞ்சனி உலகத் தமிழர்களிடம் உருக்கமான வேண்டுகோள்- - உணர்வுகள் வரிகளாக - இணைப்பு 2-24 ஜூன் 2014
23-06-2014 - 13:14
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த ஊடகப் போராளி இசைப் பிரியாவையும் அவர்போன்ற இசைப்பிரியாக்களையும் தத்தமது நலன்களுக்காக வியாபாரமாக்காதீர்கள் என சோபனா என்ற இசைப்பிரியாவின் தாயார் வேதரஞ்சனி குளோபல் தமிழ்ச் செய்திகள் ஊடாக உருக்கமான வேண்டுகோளை உலகத் தமிழர்களை நோக்கி முன்வைத்துள்ளார். அவரது வேண்டுதல் அவரது குரல்வழியாக தரப்படுகிறது கேட்டுப் பாருங்கள்.
எங்களுக்காகவே தம்மைக் கொடுத்த அந்த ஆத்மாக்களுக்கு நாங்கள் செய்யும் மரியாதை இதுதானா?
எங்கள் குடும்ப உறுப்பினரான சோபனா என்ற சொந்தப் பெயரைக் கொண்ட இசைப்பிரியாவை உங்கள் எல்லாருக்கும் தெரியும். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட ஊடகப்போராளி. திருமணமானவர். ஒரு குழந்தையின் தாய். இறுதிவரை விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து தன் தாய் மண்ணிலேயே சிங்கள ஏகாதிபத்திய அரசால் அழிக்கப்பட்டவர்.
அவளது மரணம், அதில் நிகழ்த்தப்பட்ட குற்றம் - போர்க் குற்றமாக அறியப்பட்டு ஐநாவில் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கு நாம் எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் தமிழ்மக்களுக்கான உரிமைகள் எமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல ஈடுசெய்ய முடியாத அர்ப்பணிப்புகளை தந்து அதற்காக நாம் காத்திருப்பவர்கள். ஆனால் அதற்காக தமிழர்கள் வரம்பு மீறி நடப்பதை அனுமதிக்க முடியாது.
இசைப்பிரியாவின் மரணம் நடந்து 5 வருடம் முடிவடைந்துவிட்டது. இன்றுவரை அவரது அரைகுறை ஆடைகளுடன், அல்லது அவையும் இல்லாத நிலையிலுமான புகைப்படங்களும், காணொளிகளும், தமிழ் சமூக வலைத் தளங்களிலும், செய்தி இணையங்களிலும், முகநூல் பக்கங்களிலும் வலம் வருவது நிற்கவில்லை. எதை ஓப்பிண் (open) பண்ணினாலும் - எமது விடுதலைப் போராட்டத்திற்காக தங்களை அர்ப்பணித்து, இறுதிவரை அந்த மண்ணிலேயே நின்று மரணம் அடைந்த அந்தப் பெண்களினதும், ஆண்களினதும், நிர்வாணக் காட்சிகள் மறைக்கப்படாமலேயே, தமிழ் இணையங்களுக்கு உள்ளேயே இதனைப் பகிர்வதில் எங்களுக்கு அப்படி என்ன கிடைக்கப் போகிறது.
அந்தக் காட்சிகளில் உள்ள குடும்ப உறவுகளின் மன நிலைகளை நீங்கள் என்று புரிந்துகொள்ளப் போகிறீர்கள். இதில் இருப்பது
எனது அப்பாவா?
எனது அம்மாவா?
எனது சித்தியா?
என அவர்களின் குழந்தைகள் தமது குடும்பத்தாரை கேட்ட செய்திகள் உங்களுக்கு தெரியுமா? அந்தப் பிஞ்சுமனங்களின் ஏக்கங்களுக்கு உங்களின் பதில் என்ன?
எங்களுக்காகவே தம்மைக் கொடுத்த அந்த ஆத்மாக்களுக்கு நாங்கள் செய்யும் மரியாதை இதுதானா?
அவர்களது உயிர்த் தியாகங்களை ஏன் வியாபாரமாக்குகிறீர்கள்? ஒரு செய்தியை மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன்னர் அதன் விளைவையும் சிறிது சிந்தியுங்கள். எல்லோரது குடும்பத்தினர்களுக்கும் தமது கருத்தை வெளியிடும் வசதி கிடைக்கவில்லை. இல்லாவிட்டால் எல்லாக் குடும்பங்களும் உங்களிடம் இதைத்தான் கேட்பார்கள்.
இதுமட்டும் அன்றி தற்பொழுது தமிழ்நாட்டில் எமது போராட்டத்தின் வலியை திரைப்படமாக்கும் - பணம் தேடும் பல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதையும், தமிழக உறவுகளால் அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு வருவதையும் அறிகிறோம்.
அந்த வகையிலே இசைப்பிரியா என்றழைக்கப்படும் எமது குடும்பப் பெண்ணான சோபனாவின் வரலாறும் தன்னிச்சையாகப் படமாக்கப்பட்டு வருகிறது. இது எத்தனை தமிழ் உறவுகளுக்கு தெரியுமோ தெரியாது. குடும்பத்தினரான எமக்கே அண்மையில்தான் தெரியும்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரால் போர்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. எமது வீட்டுப் பெண்ணின் வரலாறு, எமது குடும்பத்தின் வரலாறு, தியாகம், கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கணேசனுக்கு எப்படித் தெரியும்? ஊடகங்களில் வரும் ஊகங்களை வைத்துக்கொண்டு ஒரு பெண்ணின் வாழ்க்கையை, கதையாக்கிப் படமாக்க முடியுமா? அந்தப் படத்தின் விளம்பரங்களைப் பார்த்தாலே அவர் இந்தக் கதையை தேர்ந்தெடுத்ததன் நோக்கம், தெளிவாகப் புரியும். வியாபார நோக்கிலான இந்தப் படத்தை நாம் என்றும் அனுமதிக்க மாட்டோம்.
நாம் நேரடியாக கணேசனுடன் தொடர்புகொண்டும், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இந்தப் படம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த கணேசன் சென்ற போது, உறவினர்கள் நலன் விரும்பிகள் மூலம், தொடர்பு கொண்டு நாம் பேசினோம். இந்தத் திரைப்படம் வெளிவர அனுமதிக்க மாட்டோம் எனத் தெளிவாகக் கூறி வந்துள்ளோம்.
ஆனால் அவர் இவை எதனையுமே பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள், நான் செய்வதைச் செய்வேன் என்ற போக்கிலேயே நடந்து கொள்கிறார். படத்திற்கான இசை வெளியீடும் முடிவடைந்துள்ளது.
அண்மையில் லண்டனில் கூட இசை வெளியீடு செய்ய முற்பட்டு இருந்தார். அமைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு இதனை நிறுத்தினோம்.
அவர் தன்னை தமிழ் உணர்வாளன் எனவும் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ர்வு கொடுக்கவே இந்தப் படத்தை எடுப்பதாகவும் சொன்னார்.
பின்னர் பிரான்ஸில் பேசும் போது ஒன்றரைக் கோடி தந்தால் படம் எடுப்பதையே நிறுத்துவதாக சொன்னார். இதன் மூலம் அவரது தமிழ் உணர்வை நாம் உணர முடிகிறது.
கணேசன் போன்ற சிந்தை கொண்ட தமிழ் உணர்வாளர்களுக்கு நாம் தயவாகச் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இலங்கையிலே எம் தமிழ் உறவுகளுக்கு மத்தியிலே எத்தனையோ இசைப் பிரியாக்களும், பாலச்சந்திரன்களும், பிரபாகரன்களும், உயிருடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அன்று விடுதலைப் போராட்டத்தை கேலி செய்தவர்களும், வேடிக்கை பார்த்தவர்களும் கூட இன்று அதன் வலியை உணர்ந்து நிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வரை அவர்களுடன் சென்றவர்கள் நாம். ஏங்கள் உணர்வுகளுக்கு நீங்கள் வரைவிலக்கணம் தராதீர்கள்.
எம் தமிழ் உறவுகளையும், எம் அரசியற் பிரதிநிதிகளையும், இசைப்பிரியாவின் குடும்பத்தினரான நாம் தயவுடன் கேட்டுக்கொள்வது, இசைப்பிரியா தொடர்பாக வெளிவர இருக்கும் படத்தை தடுத்து நிறுத்துங்கள். தமிழக உறவுகளே எங்கள் மனவலியை புரிந்துகொள்ளுங்கள். பெண்கள் உரிமைகளை முன்னெடுக்கும் அமைப்புகளையும், தமிழ் மக்கள் உரிமைக்காக போராடும் புலம்பெயர் அமைப்புகளையும், நாம் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தத் திரைப்படத்தையும் இசைப்பிரியா போன்ற பெண் போராளிகள், ஆண் போராளிகள், பொதுமக்களது ஆடையற்ற நிலையிலான படங்களையும், காணொளிகளையும், வியாபார நோக்கத்திற்காக இணைய வலைத் தளங்களிலும், முகநூல் (Face book) பக்கங்களிலும், செய்தி ஊடகங்களிலும் வெளிவருவதை தடுக்க முன்வாருங்கள்.
அனைவரும் இணைந்து இதைச் செய்ய முன்வருவீர்கள் என நம்புகிறோம்.
விடுதலைக்காக விதையான ஆத்மாக்களுக்கு இதன் மூலம் மரியாதை செலுத்துவோமாக.
நன்றி
வணக்கம்.
இசைப்பிரியா என்ற
சோபணாவின் அம்மா
வேதரஞ்சினி










ALUTHGAMA, 23 June 2014 (IRIN) - Sri Lanka’s government should take action to prosecute acts of communal violence and promote peace, say observers, following the worst clashes in five years that left at least two dead and over 80 injured.





The main reason for the communal clash that took place in Aluthgama on June 15 is the State Intelligence Service (SIS) not having provided correct information to the police officials involved in the matter, say sources at the police headquarters.